Saturday, July 17, 2021

வரமும் சாபமும்

காலை நடையில் கடவுளைச் சந்தித்தேன்

மென்னோட்ட வியர்வையுடன் மெல்லச் சிரித்தவர்

தோளில் கையிட்டுத் தோழமை காட்டினார்

தேநீரின் கதகதப்பில் கதைக்கத் தொடங்கினோம்


எல்லாமறிந்தவரிடம் என்குறைகள் சொல்ல மனமில்லை

விந்தையான வினாக்களில் ஒன்றை வீசினேன்

அளித்த வரத்திலும் சாபத்திலும் நினைவிலிருப்பது எது?

நடுக்கடலின் அமைதியுடன் நுண்மையாக நகைத்தார்


கரிய பெரிய ஈருருளியில் வந்தவரொருவர்

அறிமுகம் இல்லாதிருந்தும் வினவப்படாமலும்

தன்னறிவைப் பற்றித் தற்பெருமை பேசினார்

தன் செல்வச்செழிப்பையும் செல்வாக்கையும் சிலாகித்தார்


குவளையெடுக்க வந்த கடைக்காரரோ அலுத்துக்கொண்டார்

படிப்பு இல்லாததையும் ஏமாளியாய் இருப்பதையும்

புலம்பிப் போக - மலங்க மலங்க விழித்தேன்.

கடவுள் குறும்பாய்ச்சிரிக்க - என்னைமீறிப் பேசியதென் வாய்.


"ஈருருளிக்காரின் அறிவு, வளம் - வரம்.

கடைக்காரரின் அறியாமை, அலுப்பு, சாபம்"

குழவியுளறல் சுவைக்கும் தாயாய் முகங்கனிந்து 

எதிர்வந்தென் இமைகளை மூடினார் தன் விரல் கொண்டு.


உண்ணாமல் உறங்காமல் நாளும் கைபேசி வெறித்துச்

சிறிதையும் பெரிதையும் எண்ணியுழன்றார் பெருமைவான்.

சுற்றத்துடன் இன்கதைபேசி, கடைமூடி, குடும்பத்துடன் உண்டு, 

மகளையும் நாய்க்குட்டியையும் மடியில் வைத்தே உறங்கிப்போனார் கடைக்காரர்.


குழம்பிய குட்டையாய் நான் - பேசினார் பரம்பொருள்.

மனிதர் வைக்கும் அளவைகள் அவர்தமக்கே விளங்குவதில்லை.

வரமென்றும் சாபமென்றும் நானேதும் தருவதில்லை.

வாழ்க்கையென்னும் விளையாட்டைக் காண்பதன்றி நானேதும் செய்வதில்லை. 


வரமும் சாபமும் மெய்யும் பொய்யும்

நீதியும் அநீதியும் நல்லதும் அல்லதும்

உம் மனச்சாளரக் கண்ணாடி வண்ணங்களன்றி வேறில்லை.

ஆழமான சிரிப்புடன் விடைகொடுத்தார் கடவுள்.


--

"காட்டு மஞ்சரி இணைய இதழின் ஜூலை'21 பதிப்பில் வெளியான வரிகள்.

http://www.mannankadu.org/kaattumanjari

Sunday, April 4, 2021

புவியும் புதுக்கோளும்



பாகம் 1: “அப்பா வரார்”

அமுதினி, தன் காலைக் கருங்காப்பியை பருகத் தொடங்க, இனிடா பாத்திரங்களைக் கழுவி விட்டு அமர்ந்தாள். அமுதினி, தோகினி என்ற கோளில் வசிக்கும் நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர். இனிடா, அவள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் இயந்திரப்பெண்(Humanoid robot). 

“அமுதினி, இன்னிக்கு இன்டர்நெட்ல வந்திருக்குற முக்கியமான செய்திகள சொல்லவா?”

“வேணாம் இனிடா, நான் வேற ஒரு சிந்தனைல இருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் என் அப்பா, பூமியிலயிருந்து என்னைப் பாக்க வராரு,.”

“ஓ.. அவர் திரும்பிப் போற வர நான் என் ரூம்லயே இருந்துடவா.. அவருக்கு என்னைக் கண்டா பிடிக்கலைன்னு தோணுது. போன தடவை வந்தப்ப கூட, உங்கள தான சமைக்கச் சொன்னாரு. நான் சமைச்சதை தொடவேயில்ல..” என்று கவலையுடன் சொன்னாள் இனிடா. 

“மன்னிச்சிடு இனிடா, என் அப்பா  4G தலைமுறை, அவரால உன்னை ஏத்துக்க முடியாததுல வியப்பில்ல.. ஆனா நான் அதப் பத்தி யோசிக்கல.. இந்த தடவ, எழிலன் பத்தி அவர்கிட்ட பேசலாம்னு தோணுது.. பல நாளா அவர்கிட்ட இதை மறைச்சிட்டு வரது எனக்கு குற்றவுணர்ச்சிய உண்டுபண்ணுது”

“நல்ல விஷயம் அமுதினி, சீக்கரம் சொல்லீடுங்க… இப்ப ரிசர்வ் செஞ்சா உடனே கல்யாணம் பண்ணிடலாம்..” உற்சாகமானாள் இனிடா. 

“எனக்குப் பதட்டமா இருக்கு இனிடா. சரி, நான் வேலைக்குக் கிளம்பறேன். அப்பா வந்துட்டார்னா டீ போட்டுக் குடு. குடிக்கலன்னா வருத்தப்படாத. நான் 3 மணிக்கு வந்துடுவேன்” என்றபடி கதவைப் பூட்டினாள். தன் தானியங்கி பி.டி.சி (Personal transportation capsule)இல் ஆய்வகத்திற்குச் சென்று சேர வேண்டிய நேரத்தை உள்ளீடு செய்துவிட்டுக் கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள். ஆய்வகம் வந்ததும் இறங்கித், தன் பணிகளைத் தொடங்கினாள். 

வழக்கமாக சந்திக்கும் இடைவேளையின் போது, அமுதினியும், எழிலனும், தத்தமது பழக்கூழ் கோப்பைகளுடன் ஒரு மேசையில் அமர்ந்தனர். 

“அப்பா கிட்ட சொல்லப் போறத நினைச்சு இன்னமும் கவலைல இருக்கியா, அமு?”அக்கறையாக விசாரித்தான் எழிலன். 

உடனே, “அப்படி பயந்துட்டு இருக்க நான் என்ன உன்ன மாதிரி எலி யா?” என்று சிரித்தாள் அமுதினி. 

“ஹலோ, நான் எழி, qலி இல்ல… நீயெல்லாம் என்ன தமிழ் படிச்சியோ” என்று பதிலளித்தான் எழிலன், சிரித்தபடியே. 

பின், “எது நடந்தாலும் நம்ம ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் போக மாட்டோம். தைரியமா இரு, அவரு உங்க அப்பா தானே.. புரிஞ்சுப்பார்” என்றான், அவள் கைகளைத் தன் கைகளினால் மூடியபடி. 

“நன்றி எழி”, அவன் கண்களைப் பார்த்தபடி பதிலுரைத்தாள் அமுதினி.


அமுதினியின் தந்தை கார்மேகம், தோகினி விண்கல நிலையத்தில் வந்திறங்கி, நுண்ணுயிர்த் தொற்றுப் பரிசோதனைகள் செய்துவிட்டு, அமுதினியின் வீட்டிற்கு வந்த போது மாலை 4மணி. அமுதினியைக் கண்டதும், “எப்படிம்மா இருக்க” என்று இராணுவத் தோரணையில் விசாரித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார். 

பாகம் 2: முதலாம் சந்திப்பு

தந்தையைக் கண்டுச் சிரித்த அமுதினி, “நல்லா இருக்கேன், முகம் கழுவி வாங்கப்பா, டீ போடறேன்” என்றாள். “வாங்க அங்கிள்” என்று வரவேற்ற இனிடாவைப் பார்த்து ஒப்பிற்கு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுத் தன் அறைக்கு கார்மேகம் சென்றார். இனிடா, தன் அறைக்குச் சென்று ஐந்தாவது முறையாகப் “பொன்னியின் செல்வன்” வாசிக்கத் தொடங்கினாள்.

கார்மேகம் வெளியே வந்ததும், தந்தையும் மகளும் ஒன்றாகத் தேநீர் அருந்தினர். 

“வேலைலாம் எப்படிம்மா போகுது, உடம்பப் பாத்துக்குறல்ல”, அன்பாகவும் அதட்டலாகவும் விசாரித்தார் கார்மேகம். 

“எல்லாம் நல்லா போகுதுப்பா” 

“ஸ்பேஸ் ஸ்டேசன் ல இன்பெக்சன் செக் பண்றேன்னு 5மணி நேரம் காக்க வெச்சிட்டானுங்க. நீ என் கூட பூமில இருந்தா எவ்ளோவோ சௌகரியமா இருக்கும். அத விட்டுட்டு, இங்க வந்து ஆராய்ச்சி பண்றேன்னு, செயற்கை ஈர்ப்பு விசை, ரோபோ ஃப்ரென்ட்ன்னு வாழ்ந்துட்டு இருக்க…” - அலுத்துக்கொண்டார் கார்மேகம். 

பேச்சை மாற்ற எண்ணி, “டீ எப்படி இருக்குப்பா” என்றாள் அமுதினி. 

“நல்லாத்தான் மா இருக்கு. எங்க காலத்துல, பூமி சூரியன்ட்ட இருந்து சரியான தூரத்துல இருக்கு, அல்ட்ரா வயலட் கதிர்கள திசை திருப்பி விடற அரோரா காந்த விசை, ஓசோன் படலம் எல்லாம் இருக்கறதுனால தான் பூமில மட்டும் உயிர்கள் வாழுதுன்னு படிச்சிருக்கோம். ஆனா அது எல்லாத்தையும் செயற்கையா உண்டு பண்ணி, கால் ஒளியாண்டு தள்ளி இருக்க ஒரு பொட்டல் கோள, உயிர்கள் வாழ ஏற்ற மாதிரி மாத்தியிருக்கறது  சரியா, தவறான்னு தெரில.”

“அரோரா, புழுதிப் புயல் , கடல்ல இருக்கும் டையாடம் பாசி எல்லாம் விண்கலத்துல வரும்போது காமிச்சாங்கம்மா.உங்க அம்மா இதெல்லாம் பாத்தா ரொம்ப சந்தோசப் பட்டிருப்பா.கோவிட் நோய் வந்து அவளும் போய் சேந்துட்டா. ஹும்” என்று பெருமூச்சு விட்டார் கார்மேகம். 

தாய் பற்றிய பேச்சு வந்தவுடன், “அப்பா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள் அமுதினி.

“சொல்லும்மா”

“என்கூட எழிலன்னு ஒருத்தர் வேலை செய்றாரு - சீனியர் சயின்டிஸ்ட், நல்லவர். நாங்க கல்யாணம் செய்துக்க விரும்புறோம்ப்பா.”

கார்மேகம் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. “சின்ன வயசில இருந்தே உனக்குத் தேவையானத நீ தான் தேர்ந்தெடுத்துருக்க.உனக்குப் பிடிச்சிருந்தா சரிம்மா. ஆனா அந்த பையன நான் பாத்த பிறகு தான் என் முடிவ சொல்லுவேன். சரியா”

“எழிலன் ரொம்ப நல்லவர்ப்பா, உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்.” என்றாள் அமுதினி மகிழ்ச்சியும் பதட்டமுமாய். 

 

அடுத்த நாள் மூவரும் காப்பிக் கடையில் சந்தித்தனர்.

“வணக்கம் சார். நான் எழிலன், அமுதினியோட ப்ராஜக்ட்ல சீனியர் சயின்டிஸ்ட்” 

“வணக்கம் தம்பி. நான் கார்மேகம்.”

எழிலன் மூவருக்கும் பழச்சாறு தருவித்தான்.

“உங்களுக்கு எந்த ஊரு தம்பி, பூமியில”

“தஞ்சாவூர் சார்”

“நீங்க எந்த சாமி கும்பிடறவங்க” என்று கார்மேகம் வினவ, தன் சாதியைக் கேட்கிறார் என்று புரிந்து கொண்ட எழிலன், “நாங்க நாத்திகம்ங்க” என்றான். 

பாகம் 3: உண்ணோட்டம்

வீட்டிற்குத் திரும்பியவுடன் கார்மேகம் பேச்சைத் தொடங்கினார். “அந்த பையன் சரிப்பட்டு வருவான்னு எனக்குத் தோணலமா. அப்பறம் உன் இஷ்டம்.”

“எழிலன் நல்லவர், நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்கார். அவர் மதமோ சாதியோ ஒரு விஷயமாப்பா?”

“அவன் நல்ல பையன்னு எப்படிம்மா சொல்ற? பொண்ணுங்க கண்ணுக்கு, பிடிச்சவன் நல்லவனா தான் தெரிவான்”

“நான் கல்யாணம் பண்ணிகிட்டா எழிலன தான் பண்ணிப்பேன். இல்லாட்டி இப்டியே இருந்துடுறேன்பா. அவர் நல்லவர்னு நிரூபிக்க என்ன செய்ய முடியும். ”

சிறிது நேரம் யோசித்த கார்மேகம், “வேணா ஒன்னு பண்ணலாம்.பூமில இருந்து, நான் கொண்டு வந்த சூட்கேஸ், ஒரு டைம் மெஷின். அத வெச்சு,அவன் நல்லவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்” என்றார். 

“அது சட்ட விரோதமாச்சே. வேணாம்ப்பா”

“இதுல நாம டைம் ட்ராவல் பண்றப்போ, அசையாம இருந்தோம்னா, மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டோம். அதனால பயப்படாதம்மா.”என்றார் கார்மேகம். அறைமனதாகச் சம்மதித்தாள் அமுதினி. 


அந்தப் பெட்டியின் விசை ஒன்றை கார்மேகம் அழுத்த, அது அந்த அறையின் அளவு பெரிதாக மாறியது. அதன் உள்ளே சென்றவுடன், “முதல்ல அவன் குழந்தைப்பருவத்தப் பாக்கலாம்” என்று கூறி சில விசைகளை அழுத்தினார் கார்மேகம். விர்ரென்ற ஓசை காதைக் கிழிக்க, 40 வினாடிகளில், குழந்தைப் பருவ எழிலன் அறைக்கால் சட்டை மட்டும் அணிந்துகொண்டு வயல்களில் ஓடுவதையும், ஆலமரத்தில் ஊஞ்சலாடுவதையும் கண்டனர். அந்நிலையிலும் படிப்பில் சிறந்து விளங்கியதைக் கண்டு அமுதினிக்குப் பெருமையாக இருந்தது. 

அடுத்து, இயந்திரம், எழிலனின் கல்லூரிக் காலத்துக்குச் சென்றது. நல்ல கல்லூரியில் படித்த எழிலனின் உருவத்திலும், உடைகளிலும், ஏற்பட்டிருந்த மாற்றங்கள், அமுதினிக்குச் சிரிப்பை வரவழைத்தன. பிறகு, எழிலன் பல பெண்களோடு நெருக்கமாயிருக்கும் காட்சிகளைக் கண்டு அமுதினி அதிர்ச்சியடைந்தாள். அவன் அப்பெண்களை அணைத்தவாறும், முத்தமிட்டவாறும் வந்த காட்சிகள், தந்தையையும் மகளையும் முகஞ்சுளிக்க வைத்தன. 

“அப்பா, போதும்” என்றாள் அமுதினி, பொருக்கமாட்டாமல். 


மகள் மிகவும் கலங்கிப்போயிருப்பதை அறிந்த கார்மேகம், “விடும்மா,நான் கூட அவன் நல்லவன்னு நினைச்சேன்.  நம்ம நினைக்கறது எல்லாம் நடந்திடாது. அவன பத்தி கல்யாணம் முன்னயே தெரிஞ்சுதுன்னு சந்தோஷப்பட்டுக்கம்மா..” என்றார். 


அமுதினி பதிலேதும் சொல்லவில்லை. 

என்னவோ நடந்திருப்பதையறிந்து வெளியே வந்த இனிடா, “அமுதினி, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, காப்பி குடிக்கறீங்களா…” என்று கேட்டாள்.

வேண்டாம் என்று சைகை செய்துவிட்டுத், தன் அறைக்குச் சென்றாள் அமுதினி.

கார்மேகம், இனிடாவைப் பார்த்து, சிநேகமாக, சிறிய புன்னகை செய்துவிட்டுத், தன் அறைக்கு உறங்கச் சென்றார். 

பாகம் 4:  நினைவு மீட்சி


படுக்கையில் விழுந்த அமுதினியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. 

மனதிலிருக்கும் துன்ப நினைவுகள் எல்லாம் ஒருசேர அவளை அழுத்தின. 


வசதியான விவசாயக் குடும்பம் கார்மேகத்தினுடையது. இளவரசி போல் தினமும் பட்டாடை உடுத்தி பள்ளிக்குச் சென்றது, வீட்டு வாசலில் வேலையாட்களுடன் கூட்டாஞ்சோறு செய்து உண்டது போன்ற மென்மையான நினைவுகளிலும், நெருஞ்சி முள்ளாய்க் குத்தின அப்பத்தா மற்றும் அப்பாவின் சில பேச்சுக்கள். ஆணாதிக்க, சாதி, மத உணர்வுகளைத், தன் வாழ்வின் உன்னதங்களாக எண்ணிய தந்தையிடம், அமுதினியின் தாய் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. அறிவாளியாக இருந்தாலும், பெண் என்பதால் மேலே படிக்கவோ, வேலைக்குப் போகவோ விடாமல், அடிமை போல நடத்தியது தந்தையின் குடும்பம். 

அமுதினியின் 12வது வயதில், கோவிட் நோய் ஏற்பட்டு, அவள் தாய் இறந்து விட, வாழ்வில் பிடியிழக்க இருந்த அமுதினி, வழிதெரியாக் காட்டில் வெறி பிடித்து ஓடுபவள் போல் படித்தாள். தன் தாய் அனுபவித்தறியாத விடுதலையுணர்வை, அவளுக்கும் சேர்த்தே தான் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை இயக்கியது. வீடு தேடி வந்த வேலை வாய்ப்புகள், தந்தை தடை செய்ய முடியாத அளவிற்கு மிகச்சிறந்தவைகளாக இருந்தன. தன் கூண்டை உடைக்கப் படிப்பைத் திறவுகோலாக மாற்றி, வேறு கோளிற்கு இடம்பெயர்ந்தாள்.

உடன் பணியாற்றிய எழிலனின் ஆண்திமிரற்ற, இயல்பான, அறிவார்ந்த குணம் இவளுக்குப் பிடித்தது. அவனுடனிருந்த நேரங்களில், தன் குழந்தைகளுக்கு இவன் நல்ல தந்தையாக இருப்பான் என்று உணர்ந்தாள். இருவரும் காதலில் இயல்பாக விழுந்தனர். 

இவ்வாறான நினைவுகளின் பிடியிலிருந்த அவள் மனம், மெல்ல மெல்ல தூக்கத்தில் அடங்கியது. 


காலை எழுந்த அமுதினி, இனிடாவிடம் தந்தைக்கு உணவு சமைத்துத் தருமாறு பணித்துவிட்டு, ஆய்வகம் சென்றாள். 

தன் அறையிலிருந்து வெளியே வந்த கார்மேகம், அமுதினியைக் காணாது, அவள் எங்கே என்று இனிடாவிடம் வினவினார். 

“அமுதினி,ஒரு மணி நேரம் முன்னவே வேலைக்குக் கிளம்பிப் போயிட்டாங்க” என்றாள் இனிடா,  தேநீர் கோப்பையை நீட்டியபடி. 

அதை வாங்கிய கார்மேகம், “ஹும். ரொம்ப நன்றி இனிடா”என்றார். 

“நான் உங்க வேலையாள். எதுக்கு நன்றியெல்லாம். இப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரியனும்னு தானே வீட்டு வேலை செய்யற ரோபோவான என்னை சர்வேய்லன்ஸ் (surveillance) ரோபோவா மாத்தி அமுதினியோட அனுப்பினீங்க..”

வெற்றிப் புன்சிரிப்பு கார்மேகத்தின் முகத்தில். 

இனிடா, மர்மமான புன்னகையோடு சமையலறைக்குள் நுழைந்தாள்.

பாகம் 5: எதிர்கொள்ளல்

ஆய்வகத்திலுருந்து மதியமே வீட்டிற்குத் திரும்பிய அமுதினி, அருகிலிருக்கும் காப்பிக் கடைக்கு, தந்தையை அழைத்துச் சென்றாள்.

இருவருக்குமான பானங்களை வாங்கிவிட்டு மேசையில் அமர்ந்தனர். 

ஒரு மிடறு காப்பியை உறிஞ்சிவிட்டு, “எனக்கு எல்லாம் தெரியும்ப்பா” என்றாள் அமுதினி, கூர்மையாக நோக்கியவாறு. 

தந்தை அதிர்ச்சியடைவதைக் கண்டவள், தொடர்ந்தாள்.

“ஹவுஸ்கீப்பிங் ரோபோவான இனிடாவ சர்வைலன்ஸ் ரோபோவா கஸ்டமைஸ் பண்ணீட்டு என்கூட தோகினிக்கு அனுப்பி வெச்சீங்க. பூமிக்கு நான் கனெக்ட் பண்ணாம இருக்கும் போதே, என் IP அட்ரெஸ்ல இருந்து பூமில இருக்க ஒரு IP க்கு மட்டும் டேட்டா ட்ரான்ஸ்ஃபர் நடந்ததில இருந்து, இதத் தெரிஞ்சுகிட்டேன்.”


“எழிலனோட சோஷியல் மீடியா அக்கவுன்ட்ஸப் பாத்து அவர பத்தித் தெரிஞ்சுகிட்டீங்க. அவர் போட்டோஸ்ல இருந்த இடங்கள, 3டி ப்ரொஜெக்ஷன் மூலம் நிஜ இடங்களா, காட்சிகளா மாத்தியிருக்கீங்க. போட்டோஸ்ல இருந்த எழிலன், அவர் தோழிகள்  உருவங்கள 3டி அனிமேஷன் மூலம் நெருக்கமா இருக்க மாதிரி செஞ்சிருக்கீங்க.” என்று அருவருப்பு முகம் காட்டினாள்.


 “இதெல்லாம் டைம் மெஷின்ல பாக்குற காட்சிகள் மாதிரி தெரிய விர்ச்சுவல் ரியாலிடிய பயன்படுத்தி இருக்கீங்க. உங்க சூட்கேஸ், டைம் மிஷின் இல்ல; 3டி விர்ச்சுவல் ரியாலிடி பரொஜெக்டர்.”

கார்மேகத்தின் முகத்தில் ஈயாடவில்லை. 

“இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு பாக்கறீங்களா? எந்த போட்டோலயுமே நான் இல்லாதத கவனிச்சிருப்பீங்க. அவர் அப்லோட் பண்ணியிருக்குற போட்டோஸ்ல பலது நான் எடுத்தது. நான் எடுத்த போட்டோஸ்ல இருந்த காட்சிகள எனக்கே வேறு விதமா அனிமேட் பண்ணி டைம் மெஷின்னு ஏமாத்த நினைச்சிருக்கீங்க” என்று சான்றுகளுடன் அமுதினி  முடிக்க, கையறு நிலைக்குச் சென்றார் கார்மேகம் . 


“உங்களுக்கு ஏன்ப்பா எழிலன பிடிக்கல? சாதி, மதம், உருவம் தவிர ஏதாவது காரணம் சொல்ல முடியுமா? பூமில பிறந்த எல்லா உயிர்களும், ஒரே ஒரு ஒற்றை செல் உயிர்ல இருந்து பிறந்தது தான். இது உசத்தி, அது குறைச்சல்னு எதையும் சொல்ல முடியாது. இப்ப இருக்க மனித இனமே, குரங்குகள்ல இருந்து, பல இனங்கள் கிளைகளா பிரிஞ்சு, அவற்றின் கூட்டா எவால்வ் ஆனது தான். சாதி, மதம் எல்லாம் பிரித்தாள சில மனிதர்கள் செஞ்ச உத்தி. அந்த அற்ப விஷயத்துக்காக பெத்த மகளையே ஏமாற்ற எப்படியெல்லாம் மெனக்கெட்டிருக்கீங்க. அதுக்கு எடுத்துகிட்ட நேரத்துல, எவல்யூஷன பத்தித் தெரிஞ்சுகிட்டிருந்தீங்கன்னா உங்க மனசு மாறியிருக்குமோ என்னவோ. பூமில இருக்க சாதி மத விஷத்த இந்த புதுக்கோள்ல விதைக்க வேணாம். ”


“சரி, நடந்தத மாத்த முடியாது. இந்த விஷயம் எல்லாம் நமக்குள்ளவே இருக்கட்டும். இங்க உங்கள வரச் சொன்னது கூட எங்க கல்யாணத்துக்கு ரிசர்வ் செய்யத் தான்.  நீங்க இல்லாம நாங்க இதைச் செய்ய விரும்பல. வரீங்களா?”

இனி எந்த வகையிலும் தன் மகளின் மனதை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்டார் கார்மேகம். மனைவியை இழந்து தனித்திருப்பவர், கையறுநிலையில், மகளையும் இழக்க விரும்பவில்லை. எழிலனும் வந்து சேர, மகிழ்ச்சியாக திருமணத்துக்கு முன்பதிவு செய்தனர். 


திருமணம் முன்பதிவு செய்ததை அமுதினி கூற, தந்தைக்கும் மகளுக்கும் இனிப்பு செய்து கொடுத்தாள் இனிடா. தன் இணையத் தரவுப் பரிமாற்றம் (Internet data transfer) குறித்த விவரங்களை மறைக்காமல், அமுதினியின் கண்ணில் படுமாறு அவள் வைத்திருந்ததன் பலன் இன்று கிடைத்துவிட்டது. சாதி நஞ்சிலிருந்து அமுதினியையும் தோகினி கோளையும் காப்பாற்றிய மகிழ்ச்சி இனிடாவிற்கு. எந்திரமான தனக்கு உள்ள சமநிலை, மனிதரான கார்மோகத்திற்கு இல்லாததை எண்ணி, இனிடா நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். 


முதிர்வு


தலையின் நரையும்

தோலின் திரையும்

முதுகின் மூப்பும்

மானுட வாழ்வின்

நிறைக்குக் குறிகைகள்.


எளியோரின் எளிமையும்

வலியோரின் வலிமையும்

கானலேயெனக் காட்டும்

மூப்பும் இறப்பும்

இயற்கை வைத்த அறுதிகள்.


முதிர்ந்த கனியின் விதைக்குள்ளும்

உறங்குகின்றன பல கனிகள்.

இறக்கும் மனிதர் வாழ்வேதான்

அவர் அடுத்த தலைமுறைக்கு

இடும் கொடைகள்.

Sunday, November 1, 2020

மகிழனின் அச்சம்

மகிழனுக்கு அஞ்சு வயசு ஆகுது. அவன் கரப்பான்பூச்சி, பூச்சாண்டி, பல்லி, வண்டு என எதுக்கும் அச்சப்பட மாட்டான். அப்படிப்பட்ட மகிழனே அச்சப்படற ஒன்னு இருக்கு - அது தான் “தாடி”.

பக்கத்து வீட்டு குழலிய அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் அவ கூட விளையாட, அவ வீட்டுக்குப் போக மாட்டான். ஏன்னா, குழலியோட அப்பா தாடி வளர்த்திருந்தார்.
மகிழன், அவன் பெற்றோரோட, அவனுக்கு விருப்பமான நடிகர் நடிச்ச திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தான். ஒரு நினைவுமீட்சிக் காட்சில அந்த நடிகர் தாடி வெச்சிருந்ததப் பாத்த மகிழன் அச்சமாகி, அப்பா மேல முகத்த வெச்சு அழத் தொடங்கீட்டான். பாதி படத்தைப் பார்க்காம வீடு திரும்பினாங்க.
“அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா - யாருக்குமே தாடி இல்ல. ஆனா குழலியோட அப்பா மாதிரி சில பேரு மட்டும் ஏன் தாடி வெச்சிருக்காங்க. முடிகளுக்கு நடுவுல இருக்க அவங்க கண், மூக்கு, வாயெல்லாம் பார்க்கவே பயமா இருக்கு” ன்னு நினைப்பான் மகிழன்.
மகிழனுக்குத் தங்கச்சி பாப்பா பிறந்தா. மகிழன் மாதிரியே இருந்ததால, அவளுக்குப் பேர் கூட "மகிழினி"ன்னு தான் வெச்சாங்க. மகிழனுக்கு அவ மேல கொள்ளை அன்பு. அவளுக்கு ஒரு வயசானப்ப, மொட்டை அடிக்கக் குடும்பத்தோட ஒரு கோயிலுக்குப் போனாங்க.
மொட்டை அடிக்கற வரிசைல அப்பா, மகிழினியத் தூக்கிட்டு முன்னயும், அம்மாவும் மகிழனும் பின்னயும் நின்னாங்க. தற்செயலா மகிழன் எட்டிப் பார்த்தப்ப, மகிழினிக்கு முன்ன தாடி வெச்ச ஒருத்தர் இருந்தார். மகிழினி வேற அவர் தோளத் தட்டித் தட்டி விளையாடினா. மகிழனுக்கு அச்சமாவும் கவலையாவும் இருந்தது. தன் தங்கைக்காக அவன் அழத் தொடங்கும் முன்ன, ஒன்னு நடந்தது. அவன் அழக் கூட மறந்துட்டான்.
மகிழினி தாடிக்காரர் தோள்ல தட்ட, அவர் திரும்பிச் சிரிச்சார். அவரோட தாடிய மகிழினி கையால பிடிச்சு இழுத்துச் சிரிக்க, அவரும் அடக்க முடியாம சிரிக்கிறார். மகிழன் திறந்த வாய் மூடாம, மகிழினியும் தாடிக்காரரும் கொஞ்சிக்கறதப் பார்த்தான்..
“தாடி வெச்சவங்க ஒன்னும் கெட்டவங்க இல்ல போல…
நாம தான் தேவையில்லாம அச்சப்படுறோமோ…”
அவனுக்கு மகிழினிய நினைச்சா பெருமையா இருந்துது.
நமக்கு ஏற்படும் உணர்வுகள் எல்லாம், நாம உலகத்தப் பார்க்கற பார்வையின் வெளிப்பாடுகள் தான். நம் பார்வையை நல்லதா மாத்தினா, நம் உணர்வுகளும், உலகமும் நல்லவையாகும்.

Tuesday, October 27, 2020

Blabbers of a sleepless mind

Mostly, most of us would do anything for a good night's sleep. There are also days (rather nights) when your mind does everything but sleeping. Whether thoughts prevent sleep or lack of sleep makes mind stray for thoughts - a vicious circle perhaps 🙆. 
Thoughts that buzz inside at times like these are pretty spaced-out. What to cook day after tomorrow, why was I so stupid when young, how do we handle a pandemic, will technology enable us live in space, why are we so absorbed in our own egos when death is imminent; from something with microscopic significance to stuff disproportionately colossal to my teeny tiny mind - my sleepless nights have seen them all. 

These kind of nights get longer when we miss something/someone. Green thoughts like my "stupid" college days or the heavier feeling of missing someone who is no more, yearning etc entail sleeplessness. Feeling the irrecoverable dent left by a deceased person and to come in terms with the loss is very painful, to say the least. Contact saved in the mobile, photos of happier times, events that evoked laughter and warmth once, evoke totally opposite emotions now. Gosh, life is mysterious. 

Coming back to sleeplessness - it may be caused due to caffeine consumption in the evenings, overeating, stress etc. I bumped into some methods over the internet to better our sleeping cycle. Documenting it, just in case anyone needs it. 

No caffeine post 6 pm. 
Keep the room cool. 
Drop gadgets one hour before you plan to sleep. 
Have dinner minimum 2 hours before.

The above-mentioned points are helpful, but if you still have trouble, try doing the following. 
Observe your inhalation and exhalation. During the following cycles, tell the italicized phrases in your mind. 
INHALATION : I am not this body
EXHALATION : I am not this mind 
This method was recommended by Mr. Jaggi Vasudev in one of his videos (could not get the link now). Not that I endorse him, but this method sure worked for me. 

So, good night! 

பாவையின் நண்பன்

பாவை உற்சாகமா காலைல எழுந்தா. 

அவங்க பள்ளில இன்னிக்குப் பாட்டுப் போட்டி. அதுல, “சின்ன சின்ன ஆசை” பாட்ட பாடப் போறா. இரண்டு நாளா பயிற்சி எடுத்தா. 


பாடல முணுமுணுத்துட்டே பல் தேய்ச்சா, குளிச்சா.

“ம் ம் ம்ம் ம்ம்… ம் ம் ம்ம் ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்… ம்ம்ம்ம் ம்ம் ம்ம்.. “


அவளுக்குப் பிடிச்ச வெள்ளை வண்ண உடைய போட்டுகிட்டா.

“வெள்ளை நிறம் தான் மேடைல பளிச் ன்னு தெரியும்.. புகைப்படத்திலயும் அழகா இருக்கும்.”


காலை உணவுக்கு, அப்பா அவளுக்குப் பிடிச்ச, குட்டி தோசை, சாம்பார் செஞ்சிருந்தாங்க. அத மகிழ்ச்சியா சாப்பிட்டா பாவை, பாடல முணுமுணுத்துட்டே!

“ம் ம் ம்ம் ம்ம்… ம் ம் ம்ம் ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்… ம்ம்ம்ம் ம்ம் ம்ம்.. “


பாவை பள்ளிக்கு போனா. அங்க அவ தோழன் கிள்ளி, 

“நல்லா பாடு பாவை. நாங்க உனக்கு கையொலி எழுப்புவோம்” ன்னு சொன்னான். பாவை இன்னும் உற்சாகம் ஆனா. 


போட்டி தொடங்கிச்சு. மேடைல பாவை பாடினா, 

“சின்ன சின்ன தோசை..

சிறகடிக்கும் தோசை..

முத்து முத்து தோசை..

முடிந்து வைத்த தோசை..”

காலைல சாப்பிட்ட ருசியான தோசை நினைவாவே இருந்திருக்கா. 

பார்வையாளர்கள் எல்லாரும் சிரிச்சிட்டாங்க. பாவைக்கு ஒரே குழப்பம். மேடைய விட்டு இறங்கின பிறகு தான் அவளுக்கு ஏன் சிரிச்சாங்கன்னு புரிஞ்சுது. 

அவள் நண்பர்கள், “தோசை… தோசை”ன்னு பாடி அவள கேலி செஞ்சாங்க.  அவளுக்கு கோபமாவும், அழுகையாவும், துன்பமாவும் இருந்துது. 

ஓ…”ன்னு அழத் தொடங்கினா.

 

திடுக்குனு தூக்கத்தில இருந்து எழுந்தா, பாவை. இப்படி ஒரு கனவு அவளுக்கு வந்ததே இல்ல. அம்மாவ எழுப்பி தண்ணி கேட்டு குடிச்சா. 

பின்ன ரொம்ப நேரமா அவளுக்கு தூக்கமே வரல.


வளவன், ஓட்டப் பந்தயத்துல கடைசியா வந்ததுனால, பாவையும் அவ நண்பர்களும் அவன கேலி செஞ்சது, அவ நினைவுக்கு வந்தது. கனவுல கேலி செய்யப்பட்டப்ப தனக்கு இருந்த மாதிரி தான் அவனுக்கும் துன்பமா இருந்திருக்கும்ன்னு பாவைக்கு தோணிச்சு. வளவன நினைக்க பாவமாவும் தன்னை நினைச்சு கோபமாகவும் வந்துது. அப்படியே தூங்கிப் போயிட்டா.


அடுத்த நாள் காலை, பள்ளிப் பேருந்துல, வளவன் பக்கத்தில போய் உட்கார்ந்தா பாவை. அவளுக்கு இன்னொரு நண்பன் கிடைக்கப் போறான்!


Saturday, May 30, 2020

கண்கட்டு

முகட்டிலிருந்து விழுகிறேன்
முடிவில்லாமல்.
பற்றுதலுக்கேதும் கைவரவில்லை
கண்பிடுங்கும் காரிருள்
நெஞ்சடைக்கும் பேரச்சம்
காற்றாய் ஒரு கரம் கையேந்த
கடவுளோ!
கண்திறக்க முயன்று
கனவு கலைந்தெழுந்தேன்.
மெய்யாயிருந்தவை கனவெனில்
நெடுங்கனவொன்றோ இவ்வாழ்வு.

Pages