காலை நடையில் கடவுளைச் சந்தித்தேன்
மென்னோட்ட வியர்வையுடன் மெல்லச் சிரித்தவர்
தோளில் கையிட்டுத் தோழமை காட்டினார்
தேநீரின் கதகதப்பில் கதைக்கத் தொடங்கினோம்
எல்லாமறிந்தவரிடம் என்குறைகள் சொல்ல மனமில்லை
விந்தையான வினாக்களில் ஒன்றை வீசினேன்
அளித்த வரத்திலும் சாபத்திலும் நினைவிலிருப்பது எது?
நடுக்கடலின் அமைதியுடன் நுண்மையாக நகைத்தார்
கரிய பெரிய ஈருருளியில் வந்தவரொருவர்
அறிமுகம் இல்லாதிருந்தும் வினவப்படாமலும்
தன்னறிவைப் பற்றித் தற்பெருமை பேசினார்
தன் செல்வச்செழிப்பையும் செல்வாக்கையும் சிலாகித்தார்
குவளையெடுக்க வந்த கடைக்காரரோ அலுத்துக்கொண்டார்
படிப்பு இல்லாததையும் ஏமாளியாய் இருப்பதையும்
புலம்பிப் போக - மலங்க மலங்க விழித்தேன்.
கடவுள் குறும்பாய்ச்சிரிக்க - என்னைமீறிப் பேசியதென் வாய்.
"ஈருருளிக்காரின் அறிவு, வளம் - வரம்.
கடைக்காரரின் அறியாமை, அலுப்பு, சாபம்"
குழவியுளறல் சுவைக்கும் தாயாய் முகங்கனிந்து
எதிர்வந்தென் இமைகளை மூடினார் தன் விரல் கொண்டு.
உண்ணாமல் உறங்காமல் நாளும் கைபேசி வெறித்துச்
சிறிதையும் பெரிதையும் எண்ணியுழன்றார் பெருமைவான்.
சுற்றத்துடன் இன்கதைபேசி, கடைமூடி, குடும்பத்துடன் உண்டு,
மகளையும் நாய்க்குட்டியையும் மடியில் வைத்தே உறங்கிப்போனார் கடைக்காரர்.
குழம்பிய குட்டையாய் நான் - பேசினார் பரம்பொருள்.
மனிதர் வைக்கும் அளவைகள் அவர்தமக்கே விளங்குவதில்லை.
வரமென்றும் சாபமென்றும் நானேதும் தருவதில்லை.
வாழ்க்கையென்னும் விளையாட்டைக் காண்பதன்றி நானேதும் செய்வதில்லை.
வரமும் சாபமும் மெய்யும் பொய்யும்
நீதியும் அநீதியும் நல்லதும் அல்லதும்
உம் மனச்சாளரக் கண்ணாடி வண்ணங்களன்றி வேறில்லை.
ஆழமான சிரிப்புடன் விடைகொடுத்தார் கடவுள்.
--
"காட்டு மஞ்சரி இணைய இதழின் ஜூலை'21 பதிப்பில் வெளியான வரிகள்.
http://www.mannankadu.org/kaattumanjari
No comments:
Post a Comment