பாகம் 1: “அப்பா வரார்”
அமுதினி, தன் காலைக் கருங்காப்பியை பருகத் தொடங்க, இனிடா பாத்திரங்களைக் கழுவி விட்டு அமர்ந்தாள். அமுதினி, தோகினி என்ற கோளில் வசிக்கும் நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர். இனிடா, அவள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் இயந்திரப்பெண்(Humanoid robot).
“அமுதினி, இன்னிக்கு இன்டர்நெட்ல வந்திருக்குற முக்கியமான செய்திகள சொல்லவா?”
“வேணாம் இனிடா, நான் வேற ஒரு சிந்தனைல இருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் என் அப்பா, பூமியிலயிருந்து என்னைப் பாக்க வராரு,.”
“ஓ.. அவர் திரும்பிப் போற வர நான் என் ரூம்லயே இருந்துடவா.. அவருக்கு என்னைக் கண்டா பிடிக்கலைன்னு தோணுது. போன தடவை வந்தப்ப கூட, உங்கள தான சமைக்கச் சொன்னாரு. நான் சமைச்சதை தொடவேயில்ல..” என்று கவலையுடன் சொன்னாள் இனிடா.
“மன்னிச்சிடு இனிடா, என் அப்பா 4G தலைமுறை, அவரால உன்னை ஏத்துக்க முடியாததுல வியப்பில்ல.. ஆனா நான் அதப் பத்தி யோசிக்கல.. இந்த தடவ, எழிலன் பத்தி அவர்கிட்ட பேசலாம்னு தோணுது.. பல நாளா அவர்கிட்ட இதை மறைச்சிட்டு வரது எனக்கு குற்றவுணர்ச்சிய உண்டுபண்ணுது”
“நல்ல விஷயம் அமுதினி, சீக்கரம் சொல்லீடுங்க… இப்ப ரிசர்வ் செஞ்சா உடனே கல்யாணம் பண்ணிடலாம்..” உற்சாகமானாள் இனிடா.
“எனக்குப் பதட்டமா இருக்கு இனிடா. சரி, நான் வேலைக்குக் கிளம்பறேன். அப்பா வந்துட்டார்னா டீ போட்டுக் குடு. குடிக்கலன்னா வருத்தப்படாத. நான் 3 மணிக்கு வந்துடுவேன்” என்றபடி கதவைப் பூட்டினாள். தன் தானியங்கி பி.டி.சி (Personal transportation capsule)இல் ஆய்வகத்திற்குச் சென்று சேர வேண்டிய நேரத்தை உள்ளீடு செய்துவிட்டுக் கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள். ஆய்வகம் வந்ததும் இறங்கித், தன் பணிகளைத் தொடங்கினாள்.
வழக்கமாக சந்திக்கும் இடைவேளையின் போது, அமுதினியும், எழிலனும், தத்தமது பழக்கூழ் கோப்பைகளுடன் ஒரு மேசையில் அமர்ந்தனர்.
“அப்பா கிட்ட சொல்லப் போறத நினைச்சு இன்னமும் கவலைல இருக்கியா, அமு?”அக்கறையாக விசாரித்தான் எழிலன்.
உடனே, “அப்படி பயந்துட்டு இருக்க நான் என்ன உன்ன மாதிரி எலி யா?” என்று சிரித்தாள் அமுதினி.
“ஹலோ, நான் எழி, qலி இல்ல… நீயெல்லாம் என்ன தமிழ் படிச்சியோ” என்று பதிலளித்தான் எழிலன், சிரித்தபடியே.
பின், “எது நடந்தாலும் நம்ம ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் போக மாட்டோம். தைரியமா இரு, அவரு உங்க அப்பா தானே.. புரிஞ்சுப்பார்” என்றான், அவள் கைகளைத் தன் கைகளினால் மூடியபடி.
“நன்றி எழி”, அவன் கண்களைப் பார்த்தபடி பதிலுரைத்தாள் அமுதினி.
அமுதினியின் தந்தை கார்மேகம், தோகினி விண்கல நிலையத்தில் வந்திறங்கி, நுண்ணுயிர்த் தொற்றுப் பரிசோதனைகள் செய்துவிட்டு, அமுதினியின் வீட்டிற்கு வந்த போது மாலை 4மணி. அமுதினியைக் கண்டதும், “எப்படிம்மா இருக்க” என்று இராணுவத் தோரணையில் விசாரித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார்.
பாகம் 2: முதலாம் சந்திப்பு
தந்தையைக் கண்டுச் சிரித்த அமுதினி, “நல்லா இருக்கேன், முகம் கழுவி வாங்கப்பா, டீ போடறேன்” என்றாள். “வாங்க அங்கிள்” என்று வரவேற்ற இனிடாவைப் பார்த்து ஒப்பிற்கு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுத் தன் அறைக்கு கார்மேகம் சென்றார். இனிடா, தன் அறைக்குச் சென்று ஐந்தாவது முறையாகப் “பொன்னியின் செல்வன்” வாசிக்கத் தொடங்கினாள்.
கார்மேகம் வெளியே வந்ததும், தந்தையும் மகளும் ஒன்றாகத் தேநீர் அருந்தினர்.
“வேலைலாம் எப்படிம்மா போகுது, உடம்பப் பாத்துக்குறல்ல”, அன்பாகவும் அதட்டலாகவும் விசாரித்தார் கார்மேகம்.
“எல்லாம் நல்லா போகுதுப்பா”
“ஸ்பேஸ் ஸ்டேசன் ல இன்பெக்சன் செக் பண்றேன்னு 5மணி நேரம் காக்க வெச்சிட்டானுங்க. நீ என் கூட பூமில இருந்தா எவ்ளோவோ சௌகரியமா இருக்கும். அத விட்டுட்டு, இங்க வந்து ஆராய்ச்சி பண்றேன்னு, செயற்கை ஈர்ப்பு விசை, ரோபோ ஃப்ரென்ட்ன்னு வாழ்ந்துட்டு இருக்க…” - அலுத்துக்கொண்டார் கார்மேகம்.
பேச்சை மாற்ற எண்ணி, “டீ எப்படி இருக்குப்பா” என்றாள் அமுதினி.
“நல்லாத்தான் மா இருக்கு. எங்க காலத்துல, பூமி சூரியன்ட்ட இருந்து சரியான தூரத்துல இருக்கு, அல்ட்ரா வயலட் கதிர்கள திசை திருப்பி விடற அரோரா காந்த விசை, ஓசோன் படலம் எல்லாம் இருக்கறதுனால தான் பூமில மட்டும் உயிர்கள் வாழுதுன்னு படிச்சிருக்கோம். ஆனா அது எல்லாத்தையும் செயற்கையா உண்டு பண்ணி, கால் ஒளியாண்டு தள்ளி இருக்க ஒரு பொட்டல் கோள, உயிர்கள் வாழ ஏற்ற மாதிரி மாத்தியிருக்கறது சரியா, தவறான்னு தெரில.”
“அரோரா, புழுதிப் புயல் , கடல்ல இருக்கும் டையாடம் பாசி எல்லாம் விண்கலத்துல வரும்போது காமிச்சாங்கம்மா.உங்க அம்மா இதெல்லாம் பாத்தா ரொம்ப சந்தோசப் பட்டிருப்பா.கோவிட் நோய் வந்து அவளும் போய் சேந்துட்டா. ஹும்” என்று பெருமூச்சு விட்டார் கார்மேகம்.
தாய் பற்றிய பேச்சு வந்தவுடன், “அப்பா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள் அமுதினி.
“சொல்லும்மா”
“என்கூட எழிலன்னு ஒருத்தர் வேலை செய்றாரு - சீனியர் சயின்டிஸ்ட், நல்லவர். நாங்க கல்யாணம் செய்துக்க விரும்புறோம்ப்பா.”
கார்மேகம் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. “சின்ன வயசில இருந்தே உனக்குத் தேவையானத நீ தான் தேர்ந்தெடுத்துருக்க.உனக்குப் பிடிச்சிருந்தா சரிம்மா. ஆனா அந்த பையன நான் பாத்த பிறகு தான் என் முடிவ சொல்லுவேன். சரியா”
“எழிலன் ரொம்ப நல்லவர்ப்பா, உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்.” என்றாள் அமுதினி மகிழ்ச்சியும் பதட்டமுமாய்.
அடுத்த நாள் மூவரும் காப்பிக் கடையில் சந்தித்தனர்.
“வணக்கம் சார். நான் எழிலன், அமுதினியோட ப்ராஜக்ட்ல சீனியர் சயின்டிஸ்ட்”
“வணக்கம் தம்பி. நான் கார்மேகம்.”
எழிலன் மூவருக்கும் பழச்சாறு தருவித்தான்.
“உங்களுக்கு எந்த ஊரு தம்பி, பூமியில”
“தஞ்சாவூர் சார்”
“நீங்க எந்த சாமி கும்பிடறவங்க” என்று கார்மேகம் வினவ, தன் சாதியைக் கேட்கிறார் என்று புரிந்து கொண்ட எழிலன், “நாங்க நாத்திகம்ங்க” என்றான்.
பாகம் 3: உண்ணோட்டம்
வீட்டிற்குத் திரும்பியவுடன் கார்மேகம் பேச்சைத் தொடங்கினார். “அந்த பையன் சரிப்பட்டு வருவான்னு எனக்குத் தோணலமா. அப்பறம் உன் இஷ்டம்.”
“எழிலன் நல்லவர், நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்கார். அவர் மதமோ சாதியோ ஒரு விஷயமாப்பா?”
“அவன் நல்ல பையன்னு எப்படிம்மா சொல்ற? பொண்ணுங்க கண்ணுக்கு, பிடிச்சவன் நல்லவனா தான் தெரிவான்”
“நான் கல்யாணம் பண்ணிகிட்டா எழிலன தான் பண்ணிப்பேன். இல்லாட்டி இப்டியே இருந்துடுறேன்பா. அவர் நல்லவர்னு நிரூபிக்க என்ன செய்ய முடியும். ”
சிறிது நேரம் யோசித்த கார்மேகம், “வேணா ஒன்னு பண்ணலாம்.பூமில இருந்து, நான் கொண்டு வந்த சூட்கேஸ், ஒரு டைம் மெஷின். அத வெச்சு,அவன் நல்லவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்” என்றார்.
“அது சட்ட விரோதமாச்சே. வேணாம்ப்பா”
“இதுல நாம டைம் ட்ராவல் பண்றப்போ, அசையாம இருந்தோம்னா, மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டோம். அதனால பயப்படாதம்மா.”என்றார் கார்மேகம். அறைமனதாகச் சம்மதித்தாள் அமுதினி.
அந்தப் பெட்டியின் விசை ஒன்றை கார்மேகம் அழுத்த, அது அந்த அறையின் அளவு பெரிதாக மாறியது. அதன் உள்ளே சென்றவுடன், “முதல்ல அவன் குழந்தைப்பருவத்தப் பாக்கலாம்” என்று கூறி சில விசைகளை அழுத்தினார் கார்மேகம். விர்ரென்ற ஓசை காதைக் கிழிக்க, 40 வினாடிகளில், குழந்தைப் பருவ எழிலன் அறைக்கால் சட்டை மட்டும் அணிந்துகொண்டு வயல்களில் ஓடுவதையும், ஆலமரத்தில் ஊஞ்சலாடுவதையும் கண்டனர். அந்நிலையிலும் படிப்பில் சிறந்து விளங்கியதைக் கண்டு அமுதினிக்குப் பெருமையாக இருந்தது.
அடுத்து, இயந்திரம், எழிலனின் கல்லூரிக் காலத்துக்குச் சென்றது. நல்ல கல்லூரியில் படித்த எழிலனின் உருவத்திலும், உடைகளிலும், ஏற்பட்டிருந்த மாற்றங்கள், அமுதினிக்குச் சிரிப்பை வரவழைத்தன. பிறகு, எழிலன் பல பெண்களோடு நெருக்கமாயிருக்கும் காட்சிகளைக் கண்டு அமுதினி அதிர்ச்சியடைந்தாள். அவன் அப்பெண்களை அணைத்தவாறும், முத்தமிட்டவாறும் வந்த காட்சிகள், தந்தையையும் மகளையும் முகஞ்சுளிக்க வைத்தன.
“அப்பா, போதும்” என்றாள் அமுதினி, பொருக்கமாட்டாமல்.
மகள் மிகவும் கலங்கிப்போயிருப்பதை அறிந்த கார்மேகம், “விடும்மா,நான் கூட அவன் நல்லவன்னு நினைச்சேன். நம்ம நினைக்கறது எல்லாம் நடந்திடாது. அவன பத்தி கல்யாணம் முன்னயே தெரிஞ்சுதுன்னு சந்தோஷப்பட்டுக்கம்மா..” என்றார்.
அமுதினி பதிலேதும் சொல்லவில்லை.
என்னவோ நடந்திருப்பதையறிந்து வெளியே வந்த இனிடா, “அமுதினி, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, காப்பி குடிக்கறீங்களா…” என்று கேட்டாள்.
வேண்டாம் என்று சைகை செய்துவிட்டுத், தன் அறைக்குச் சென்றாள் அமுதினி.
கார்மேகம், இனிடாவைப் பார்த்து, சிநேகமாக, சிறிய புன்னகை செய்துவிட்டுத், தன் அறைக்கு உறங்கச் சென்றார்.
பாகம் 4: நினைவு மீட்சி
படுக்கையில் விழுந்த அமுதினியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
மனதிலிருக்கும் துன்ப நினைவுகள் எல்லாம் ஒருசேர அவளை அழுத்தின.
வசதியான விவசாயக் குடும்பம் கார்மேகத்தினுடையது. இளவரசி போல் தினமும் பட்டாடை உடுத்தி பள்ளிக்குச் சென்றது, வீட்டு வாசலில் வேலையாட்களுடன் கூட்டாஞ்சோறு செய்து உண்டது போன்ற மென்மையான நினைவுகளிலும், நெருஞ்சி முள்ளாய்க் குத்தின அப்பத்தா மற்றும் அப்பாவின் சில பேச்சுக்கள். ஆணாதிக்க, சாதி, மத உணர்வுகளைத், தன் வாழ்வின் உன்னதங்களாக எண்ணிய தந்தையிடம், அமுதினியின் தாய் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. அறிவாளியாக இருந்தாலும், பெண் என்பதால் மேலே படிக்கவோ, வேலைக்குப் போகவோ விடாமல், அடிமை போல நடத்தியது தந்தையின் குடும்பம்.
அமுதினியின் 12வது வயதில், கோவிட் நோய் ஏற்பட்டு, அவள் தாய் இறந்து விட, வாழ்வில் பிடியிழக்க இருந்த அமுதினி, வழிதெரியாக் காட்டில் வெறி பிடித்து ஓடுபவள் போல் படித்தாள். தன் தாய் அனுபவித்தறியாத விடுதலையுணர்வை, அவளுக்கும் சேர்த்தே தான் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை இயக்கியது. வீடு தேடி வந்த வேலை வாய்ப்புகள், தந்தை தடை செய்ய முடியாத அளவிற்கு மிகச்சிறந்தவைகளாக இருந்தன. தன் கூண்டை உடைக்கப் படிப்பைத் திறவுகோலாக மாற்றி, வேறு கோளிற்கு இடம்பெயர்ந்தாள்.
உடன் பணியாற்றிய எழிலனின் ஆண்திமிரற்ற, இயல்பான, அறிவார்ந்த குணம் இவளுக்குப் பிடித்தது. அவனுடனிருந்த நேரங்களில், தன் குழந்தைகளுக்கு இவன் நல்ல தந்தையாக இருப்பான் என்று உணர்ந்தாள். இருவரும் காதலில் இயல்பாக விழுந்தனர்.
இவ்வாறான நினைவுகளின் பிடியிலிருந்த அவள் மனம், மெல்ல மெல்ல தூக்கத்தில் அடங்கியது.
காலை எழுந்த அமுதினி, இனிடாவிடம் தந்தைக்கு உணவு சமைத்துத் தருமாறு பணித்துவிட்டு, ஆய்வகம் சென்றாள்.
தன் அறையிலிருந்து வெளியே வந்த கார்மேகம், அமுதினியைக் காணாது, அவள் எங்கே என்று இனிடாவிடம் வினவினார்.
“அமுதினி,ஒரு மணி நேரம் முன்னவே வேலைக்குக் கிளம்பிப் போயிட்டாங்க” என்றாள் இனிடா, தேநீர் கோப்பையை நீட்டியபடி.
அதை வாங்கிய கார்மேகம், “ஹும். ரொம்ப நன்றி இனிடா”என்றார்.
“நான் உங்க வேலையாள். எதுக்கு நன்றியெல்லாம். இப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரியனும்னு தானே வீட்டு வேலை செய்யற ரோபோவான என்னை சர்வேய்லன்ஸ் (surveillance) ரோபோவா மாத்தி அமுதினியோட அனுப்பினீங்க..”
வெற்றிப் புன்சிரிப்பு கார்மேகத்தின் முகத்தில்.
இனிடா, மர்மமான புன்னகையோடு சமையலறைக்குள் நுழைந்தாள்.
பாகம் 5: எதிர்கொள்ளல்
ஆய்வகத்திலுருந்து மதியமே வீட்டிற்குத் திரும்பிய அமுதினி, அருகிலிருக்கும் காப்பிக் கடைக்கு, தந்தையை அழைத்துச் சென்றாள்.
இருவருக்குமான பானங்களை வாங்கிவிட்டு மேசையில் அமர்ந்தனர்.
ஒரு மிடறு காப்பியை உறிஞ்சிவிட்டு, “எனக்கு எல்லாம் தெரியும்ப்பா” என்றாள் அமுதினி, கூர்மையாக நோக்கியவாறு.
தந்தை அதிர்ச்சியடைவதைக் கண்டவள், தொடர்ந்தாள்.
“ஹவுஸ்கீப்பிங் ரோபோவான இனிடாவ சர்வைலன்ஸ் ரோபோவா கஸ்டமைஸ் பண்ணீட்டு என்கூட தோகினிக்கு அனுப்பி வெச்சீங்க. பூமிக்கு நான் கனெக்ட் பண்ணாம இருக்கும் போதே, என் IP அட்ரெஸ்ல இருந்து பூமில இருக்க ஒரு IP க்கு மட்டும் டேட்டா ட்ரான்ஸ்ஃபர் நடந்ததில இருந்து, இதத் தெரிஞ்சுகிட்டேன்.”
“எழிலனோட சோஷியல் மீடியா அக்கவுன்ட்ஸப் பாத்து அவர பத்தித் தெரிஞ்சுகிட்டீங்க. அவர் போட்டோஸ்ல இருந்த இடங்கள, 3டி ப்ரொஜெக்ஷன் மூலம் நிஜ இடங்களா, காட்சிகளா மாத்தியிருக்கீங்க. போட்டோஸ்ல இருந்த எழிலன், அவர் தோழிகள் உருவங்கள 3டி அனிமேஷன் மூலம் நெருக்கமா இருக்க மாதிரி செஞ்சிருக்கீங்க.” என்று அருவருப்பு முகம் காட்டினாள்.
“இதெல்லாம் டைம் மெஷின்ல பாக்குற காட்சிகள் மாதிரி தெரிய விர்ச்சுவல் ரியாலிடிய பயன்படுத்தி இருக்கீங்க. உங்க சூட்கேஸ், டைம் மிஷின் இல்ல; 3டி விர்ச்சுவல் ரியாலிடி பரொஜெக்டர்.”
கார்மேகத்தின் முகத்தில் ஈயாடவில்லை.
“இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு பாக்கறீங்களா? எந்த போட்டோலயுமே நான் இல்லாதத கவனிச்சிருப்பீங்க. அவர் அப்லோட் பண்ணியிருக்குற போட்டோஸ்ல பலது நான் எடுத்தது. நான் எடுத்த போட்டோஸ்ல இருந்த காட்சிகள எனக்கே வேறு விதமா அனிமேட் பண்ணி டைம் மெஷின்னு ஏமாத்த நினைச்சிருக்கீங்க” என்று சான்றுகளுடன் அமுதினி முடிக்க, கையறு நிலைக்குச் சென்றார் கார்மேகம் .
“உங்களுக்கு ஏன்ப்பா எழிலன பிடிக்கல? சாதி, மதம், உருவம் தவிர ஏதாவது காரணம் சொல்ல முடியுமா? பூமில பிறந்த எல்லா உயிர்களும், ஒரே ஒரு ஒற்றை செல் உயிர்ல இருந்து பிறந்தது தான். இது உசத்தி, அது குறைச்சல்னு எதையும் சொல்ல முடியாது. இப்ப இருக்க மனித இனமே, குரங்குகள்ல இருந்து, பல இனங்கள் கிளைகளா பிரிஞ்சு, அவற்றின் கூட்டா எவால்வ் ஆனது தான். சாதி, மதம் எல்லாம் பிரித்தாள சில மனிதர்கள் செஞ்ச உத்தி. அந்த அற்ப விஷயத்துக்காக பெத்த மகளையே ஏமாற்ற எப்படியெல்லாம் மெனக்கெட்டிருக்கீங்க. அதுக்கு எடுத்துகிட்ட நேரத்துல, எவல்யூஷன பத்தித் தெரிஞ்சுகிட்டிருந்தீங்கன்னா உங்க மனசு மாறியிருக்குமோ என்னவோ. பூமில இருக்க சாதி மத விஷத்த இந்த புதுக்கோள்ல விதைக்க வேணாம். ”
“சரி, நடந்தத மாத்த முடியாது. இந்த விஷயம் எல்லாம் நமக்குள்ளவே இருக்கட்டும். இங்க உங்கள வரச் சொன்னது கூட எங்க கல்யாணத்துக்கு ரிசர்வ் செய்யத் தான். நீங்க இல்லாம நாங்க இதைச் செய்ய விரும்பல. வரீங்களா?”
இனி எந்த வகையிலும் தன் மகளின் மனதை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்டார் கார்மேகம். மனைவியை இழந்து தனித்திருப்பவர், கையறுநிலையில், மகளையும் இழக்க விரும்பவில்லை. எழிலனும் வந்து சேர, மகிழ்ச்சியாக திருமணத்துக்கு முன்பதிவு செய்தனர்.
திருமணம் முன்பதிவு செய்ததை அமுதினி கூற, தந்தைக்கும் மகளுக்கும் இனிப்பு செய்து கொடுத்தாள் இனிடா. தன் இணையத் தரவுப் பரிமாற்றம் (Internet data transfer) குறித்த விவரங்களை மறைக்காமல், அமுதினியின் கண்ணில் படுமாறு அவள் வைத்திருந்ததன் பலன் இன்று கிடைத்துவிட்டது. சாதி நஞ்சிலிருந்து அமுதினியையும் தோகினி கோளையும் காப்பாற்றிய மகிழ்ச்சி இனிடாவிற்கு. எந்திரமான தனக்கு உள்ள சமநிலை, மனிதரான கார்மோகத்திற்கு இல்லாததை எண்ணி, இனிடா நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
No comments:
Post a Comment