Tuesday, October 27, 2020

பாவையின் நண்பன்

பாவை உற்சாகமா காலைல எழுந்தா. 

அவங்க பள்ளில இன்னிக்குப் பாட்டுப் போட்டி. அதுல, “சின்ன சின்ன ஆசை” பாட்ட பாடப் போறா. இரண்டு நாளா பயிற்சி எடுத்தா. 


பாடல முணுமுணுத்துட்டே பல் தேய்ச்சா, குளிச்சா.

“ம் ம் ம்ம் ம்ம்… ம் ம் ம்ம் ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்… ம்ம்ம்ம் ம்ம் ம்ம்.. “


அவளுக்குப் பிடிச்ச வெள்ளை வண்ண உடைய போட்டுகிட்டா.

“வெள்ளை நிறம் தான் மேடைல பளிச் ன்னு தெரியும்.. புகைப்படத்திலயும் அழகா இருக்கும்.”


காலை உணவுக்கு, அப்பா அவளுக்குப் பிடிச்ச, குட்டி தோசை, சாம்பார் செஞ்சிருந்தாங்க. அத மகிழ்ச்சியா சாப்பிட்டா பாவை, பாடல முணுமுணுத்துட்டே!

“ம் ம் ம்ம் ம்ம்… ம் ம் ம்ம் ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்… ம்ம்ம்ம் ம்ம் ம்ம்.. “


பாவை பள்ளிக்கு போனா. அங்க அவ தோழன் கிள்ளி, 

“நல்லா பாடு பாவை. நாங்க உனக்கு கையொலி எழுப்புவோம்” ன்னு சொன்னான். பாவை இன்னும் உற்சாகம் ஆனா. 


போட்டி தொடங்கிச்சு. மேடைல பாவை பாடினா, 

“சின்ன சின்ன தோசை..

சிறகடிக்கும் தோசை..

முத்து முத்து தோசை..

முடிந்து வைத்த தோசை..”

காலைல சாப்பிட்ட ருசியான தோசை நினைவாவே இருந்திருக்கா. 

பார்வையாளர்கள் எல்லாரும் சிரிச்சிட்டாங்க. பாவைக்கு ஒரே குழப்பம். மேடைய விட்டு இறங்கின பிறகு தான் அவளுக்கு ஏன் சிரிச்சாங்கன்னு புரிஞ்சுது. 

அவள் நண்பர்கள், “தோசை… தோசை”ன்னு பாடி அவள கேலி செஞ்சாங்க.  அவளுக்கு கோபமாவும், அழுகையாவும், துன்பமாவும் இருந்துது. 

ஓ…”ன்னு அழத் தொடங்கினா.

 

திடுக்குனு தூக்கத்தில இருந்து எழுந்தா, பாவை. இப்படி ஒரு கனவு அவளுக்கு வந்ததே இல்ல. அம்மாவ எழுப்பி தண்ணி கேட்டு குடிச்சா. 

பின்ன ரொம்ப நேரமா அவளுக்கு தூக்கமே வரல.


வளவன், ஓட்டப் பந்தயத்துல கடைசியா வந்ததுனால, பாவையும் அவ நண்பர்களும் அவன கேலி செஞ்சது, அவ நினைவுக்கு வந்தது. கனவுல கேலி செய்யப்பட்டப்ப தனக்கு இருந்த மாதிரி தான் அவனுக்கும் துன்பமா இருந்திருக்கும்ன்னு பாவைக்கு தோணிச்சு. வளவன நினைக்க பாவமாவும் தன்னை நினைச்சு கோபமாகவும் வந்துது. அப்படியே தூங்கிப் போயிட்டா.


அடுத்த நாள் காலை, பள்ளிப் பேருந்துல, வளவன் பக்கத்தில போய் உட்கார்ந்தா பாவை. அவளுக்கு இன்னொரு நண்பன் கிடைக்கப் போறான்!


6 comments:

  1. Excellent narration with good moral.
    Suriyah rocks as always 😍

    ReplyDelete
  2. This was an excellent moral story awasome 👌👌🥳🥳🙂

    ReplyDelete
  3. Replies
    1. Thanks dear :) just went through your blog, it is great. did not know that you blogged till now, will read and ping you :) happy blogging.

      Delete

Pages