Showing posts with label philosophical. Show all posts
Showing posts with label philosophical. Show all posts

Saturday, July 17, 2021

வரமும் சாபமும்

காலை நடையில் கடவுளைச் சந்தித்தேன்

மென்னோட்ட வியர்வையுடன் மெல்லச் சிரித்தவர்

தோளில் கையிட்டுத் தோழமை காட்டினார்

தேநீரின் கதகதப்பில் கதைக்கத் தொடங்கினோம்


எல்லாமறிந்தவரிடம் என்குறைகள் சொல்ல மனமில்லை

விந்தையான வினாக்களில் ஒன்றை வீசினேன்

அளித்த வரத்திலும் சாபத்திலும் நினைவிலிருப்பது எது?

நடுக்கடலின் அமைதியுடன் நுண்மையாக நகைத்தார்


கரிய பெரிய ஈருருளியில் வந்தவரொருவர்

அறிமுகம் இல்லாதிருந்தும் வினவப்படாமலும்

தன்னறிவைப் பற்றித் தற்பெருமை பேசினார்

தன் செல்வச்செழிப்பையும் செல்வாக்கையும் சிலாகித்தார்


குவளையெடுக்க வந்த கடைக்காரரோ அலுத்துக்கொண்டார்

படிப்பு இல்லாததையும் ஏமாளியாய் இருப்பதையும்

புலம்பிப் போக - மலங்க மலங்க விழித்தேன்.

கடவுள் குறும்பாய்ச்சிரிக்க - என்னைமீறிப் பேசியதென் வாய்.


"ஈருருளிக்காரின் அறிவு, வளம் - வரம்.

கடைக்காரரின் அறியாமை, அலுப்பு, சாபம்"

குழவியுளறல் சுவைக்கும் தாயாய் முகங்கனிந்து 

எதிர்வந்தென் இமைகளை மூடினார் தன் விரல் கொண்டு.


உண்ணாமல் உறங்காமல் நாளும் கைபேசி வெறித்துச்

சிறிதையும் பெரிதையும் எண்ணியுழன்றார் பெருமைவான்.

சுற்றத்துடன் இன்கதைபேசி, கடைமூடி, குடும்பத்துடன் உண்டு, 

மகளையும் நாய்க்குட்டியையும் மடியில் வைத்தே உறங்கிப்போனார் கடைக்காரர்.


குழம்பிய குட்டையாய் நான் - பேசினார் பரம்பொருள்.

மனிதர் வைக்கும் அளவைகள் அவர்தமக்கே விளங்குவதில்லை.

வரமென்றும் சாபமென்றும் நானேதும் தருவதில்லை.

வாழ்க்கையென்னும் விளையாட்டைக் காண்பதன்றி நானேதும் செய்வதில்லை. 


வரமும் சாபமும் மெய்யும் பொய்யும்

நீதியும் அநீதியும் நல்லதும் அல்லதும்

உம் மனச்சாளரக் கண்ணாடி வண்ணங்களன்றி வேறில்லை.

ஆழமான சிரிப்புடன் விடைகொடுத்தார் கடவுள்.


--

"காட்டு மஞ்சரி இணைய இதழின் ஜூலை'21 பதிப்பில் வெளியான வரிகள்.

http://www.mannankadu.org/kaattumanjari

Thursday, August 30, 2018

மெய்த்திருப்பது எதுவோ

நில்லாது நிலையாது
ஓடும் வாழ்வினிலே
காலம் கடந்திடினும்
மாறிலியாய் இருப்பதென்னவோ...

அன்பு, புகழ், செல்வம் என
எல்லாமே மாறுகையில் - எதும்
மாறாதிருக்க வேட்கை கொள்ளல்
நீர்க்குமிழியில் நிரந்தரம் நாடுதலே.

எல்லாம் நீர்க்குமிழியெனில்
எதுவும் மாறுமெனில்
மெய்த்திருப்பதெதுவோ?
மெய்யென்றொன்றுண்டோ?

நீரில் எழுந்து உடையும் வரை
குமிழி மெய் தானே...

இல்லாதிருந்தபின் எழுந்து
பின் உடைந்து இல்லாததாகும்
குமிழி - அது வாழும் வரை
மெய்யன்றோ

உணர்ச்சி உறவு உடமைதனில்
மாறிலிகள் தேடாமல்
கிட்டும் நேரமே அது மெய்யென்று
தாமரையில் தண்ணீராய் இன்புற்று வாழ்ந்திடுவோம்...

Monday, May 21, 2018

மறவோம் மறவோம்

This is a fast piece written today.  Can be labelled philosophical or spiritual.

Though these sort of ideas in me lack depth, i found it very meaningful to pen this down. May seem half baked to a spiritually great person. But still coming up with verses like these is my new found joy.

Hope it is relatable and evokes deep thoughts.

உடலென்னும் பாத்திரத்தில்
உலகுக்குள் நுழைகிறோம்
உடலன்று நான் என்ற
உண்மையை மறக்கிறோம்

பாத்திரத்தால் வந்த கதையில்
பல பாத்திரம் ஏற்கிறோம்
வரும் போகும் பாத்திரங்கள்
சொந்தமாக நினைக்கிறோம்

வந்த போதும் போகும் போதும்
கர்மமன்றி கையில் ஏதுமன்று
இடைப்பட்ட காலத்தில்
மேலும் கர்மம் சேர்க்கிறோம்

ஆணென்றும் பெண்னென்றும்
அரசனென்றும் ஆண்டியென்றும்
தமதென்றும் பிறரதென்றும்
மாயையிலே கிடக்கிறோம்

கதை முடிந்த பின்னே
கையிலேதும் நில்லாத போது
பொருளாசை பொறாமை
போட்டிகள் தான் ஏனோ

கதை முடியும் வரையிலே
கருணை அன்பு காட்டியே
கதை மாந்தர் மகிழவே
கதை வளர்ப்போம்  இனிமையாய்.

Pages