Saturday, January 1, 2022

ஐந்தறிவாசான்

பிறருழைப்பில் பேர்வாங்கப்
பாரில் பலரிருக்கையிலே
பறவைகள் உங்களுக்கோ
பிறப்பே தன்முனைப்பால்

தம்மக்கள் ஆனாலும்

தம்வாழ்க்கை அவர்பயில

வளர்த்துவிட்டுத் துரத்திடுவாள்

திடம்மிக்க பறவைத்தாய்


பெரும் வானக் கித்தானில் 

சிறகால் வண்ணம்தீட்டிடவே

தன்னை இலகுவாக்கிக்

கீழ்மை விட்டெழுகின்றீர்


உம் இடமே உலகமென்று

ஓரிடம் ஒட்டித் தேங்காமல்

விண்கீழ் யாதும் ஊரென்று

பருவத்திற்கிடம்மாறுகின்றீர்


ஐந்தறிவென உமைக்கொள்ளும்

ஆறறிவு மானிடர்க்குப் 

பாடங்கள் பயிற்றுவிக்கும்

பறவைகளே! நன்றியேற்பீர்! 


ஜனவரி'22 காட்டுமஞ்சரி இதழின் பறவைகள் பற்றிய சிறப்பிதழில் வெளியானது.

No comments:

Post a Comment

Pages