Image source: https://unsplash.com/photos/4zfacTKyZ7w
சின்னஞ்சிறுமி ஆதிரை கடவுள் தேடுகிறாள்
எங்கே எப்படி இருப்பார்?
விளிப்பதெப்படி? அம்மாவா? அப்பாவா?
மனிதர் போலிருப்பாரா?
ஜிம்மி கண்ணில் தெரிவாரா?
ஒருவரா? பலர் உளரா?
தாத்தா கூட்டிச்சென்ற தலங்களில்
கடவுள் இல்லை; இருந்தது சிலையே.
காற்றைப் போல் எங்குமிருப்பார் -
அம்மாவின் பதில் போதவில்லை.
பூசையறை சாவித்துளை வழி
திருட்டுத்தனமாய்த் தேடினாள்.
கடவுள் என்று யாருமில்லைடா -
அப்பா சொல்ல, அரண்டாள் ஆதிரை.
பெருவெடிப்பு, படிமலர்ச்சி, உளவியல் என
முடிந்தவரை எளிதாக்கி விளக்கினார்.
ஆதிரைக்கு ஏரணம் புரியவில்லை.
இவற்றை நடத்தியவர் தானே கடவுள்?
வாசலில் ஜிம்மி குலைக்க,
ஓடிப்போய் பால் வைத்தாள்.
அவன் குழந்தைக் கண்கள் கனிந்தன.
எட்டாப் பரிமாணத்தில், பல்லண்டத்துயிர்களையும் உணர்ந்துகொள்ளும்
கடவுளெனப்படுவது மகிழ்ந்து சிரித்தது,
ஜிம்மி, ஆதிரை வழியே.
அக்டோபர்'21 "காட்டு மஞ்சரி" மின்னிதழில் வெளிவந்தது https://drive.google.com/file/d/12mCgtZuLUOugAnIfunJKI3pNkPY7X4A_/view