மகிழனுக்கு அஞ்சு வயசு ஆகுது. அவன் கரப்பான்பூச்சி, பூச்சாண்டி, பல்லி, வண்டு என எதுக்கும் அச்சப்பட மாட்டான். அப்படிப்பட்ட மகிழனே அச்சப்படற ஒன்னு இருக்கு - அது தான் “தாடி”.
பக்கத்து வீட்டு குழலிய அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் அவ கூட விளையாட, அவ வீட்டுக்குப் போக மாட்டான். ஏன்னா, குழலியோட அப்பா தாடி வளர்த்திருந்தார்.
மகிழன், அவன் பெற்றோரோட, அவனுக்கு விருப்பமான நடிகர் நடிச்ச திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தான். ஒரு நினைவுமீட்சிக் காட்சில அந்த நடிகர் தாடி வெச்சிருந்ததப் பாத்த மகிழன் அச்சமாகி, அப்பா மேல முகத்த வெச்சு அழத் தொடங்கீட்டான். பாதி படத்தைப் பார்க்காம வீடு திரும்பினாங்க.
“அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா - யாருக்குமே தாடி இல்ல. ஆனா குழலியோட அப்பா மாதிரி சில பேரு மட்டும் ஏன் தாடி வெச்சிருக்காங்க. முடிகளுக்கு நடுவுல இருக்க அவங்க கண், மூக்கு, வாயெல்லாம் பார்க்கவே பயமா இருக்கு” ன்னு நினைப்பான் மகிழன்.
மகிழனுக்குத் தங்கச்சி பாப்பா பிறந்தா. மகிழன் மாதிரியே இருந்ததால, அவளுக்குப் பேர் கூட "மகிழினி"ன்னு தான் வெச்சாங்க. மகிழனுக்கு அவ மேல கொள்ளை அன்பு. அவளுக்கு ஒரு வயசானப்ப, மொட்டை அடிக்கக் குடும்பத்தோட ஒரு கோயிலுக்குப் போனாங்க.
மொட்டை அடிக்கற வரிசைல அப்பா, மகிழினியத் தூக்கிட்டு முன்னயும், அம்மாவும் மகிழனும் பின்னயும் நின்னாங்க. தற்செயலா மகிழன் எட்டிப் பார்த்தப்ப, மகிழினிக்கு முன்ன தாடி வெச்ச ஒருத்தர் இருந்தார். மகிழினி வேற அவர் தோளத் தட்டித் தட்டி விளையாடினா. மகிழனுக்கு அச்சமாவும் கவலையாவும் இருந்தது. தன் தங்கைக்காக அவன் அழத் தொடங்கும் முன்ன, ஒன்னு நடந்தது. அவன் அழக் கூட மறந்துட்டான்.
மகிழினி தாடிக்காரர் தோள்ல தட்ட, அவர் திரும்பிச் சிரிச்சார். அவரோட தாடிய மகிழினி கையால பிடிச்சு இழுத்துச் சிரிக்க, அவரும் அடக்க முடியாம சிரிக்கிறார். மகிழன் திறந்த வாய் மூடாம, மகிழினியும் தாடிக்காரரும் கொஞ்சிக்கறதப் பார்த்தான்..
“தாடி வெச்சவங்க ஒன்னும் கெட்டவங்க இல்ல போல…
நாம தான் தேவையில்லாம அச்சப்படுறோமோ…”
அவனுக்கு மகிழினிய நினைச்சா பெருமையா இருந்துது.
நமக்கு ஏற்படும் உணர்வுகள் எல்லாம், நாம உலகத்தப் பார்க்கற பார்வையின் வெளிப்பாடுகள் தான். நம் பார்வையை நல்லதா மாத்தினா, நம் உணர்வுகளும், உலகமும் நல்லவையாகும்.