Tuesday, June 4, 2019

வாழ்க்கை என்பதேது?

பேரிருள் பெருங்காட்டில்
கண்கட்டுப் பயணமோ...
நீர்பாரித்த கண்ணாடியில்
பிம்பங்கள் கோர்வையோ...

பேருந்துக் கூட்டத்தில்
கண்சிரிக்கும் மழலையோ...
கன்னிகுழல் பூவாசம்
கவர்ந்துவரும் தென்றலோ...

தாவரத்தின் மணிமுடியாய்
பெருமைகொள் மலரோ...
பேரிடியும் மின்னலுமாய்
ஆடும் ஆங்கார மழையோ...

இரவினிலே நிலவொளியில்
கேட்ட திரைப்பாடலோ...
இரைக்கிரந்து வாலாட்டும்
வீதி வாழ் நாய்களோ...

இதெல்லாம் உண்டாயினும்
இதேதுமல்லாதிருப்பதோ...

பதிலற்ற கேள்விகளாய்
முடிவற்ற சிறு குகையாய்
அடியில்லா ஆழியாய்
பிறப்பென்றும் இறப்பென்றும்
இயற்கை ஆட்டுவிக்கும்
கண்ணாமூச்சி ஆட்டமே
வாழ்க்கை

இதில்
உயர்வு தாழ்வு
வெற்றி தோல்வி
நான் நீ அவன் அது
என்பதேது..

வெவ்வேறு அச்சுகளுள்
ஊற்றிய ஒரே மெழுகே
வையகத்து உயிரெல்லாம்..

Pages