Monday, May 20, 2013

தோல்விச்சிரிப்பு

தாய் ஒரு கையில் தந்தை ஒரு கையிலென
அலையைக் கண்டு குதித்தெழும்பும் குழந்தையிடம்
தோற்றுத் திரும்புகையில் சிரிக்கிறது கடல்,
ஏக மகிழ்ச்சியாய்...

கடலும் கடவுளும்

தாய் தந்தை கைபிடித் தெகிறி,
அலைகளென் கால்கள் தொடவிடாமல் சிரித்தேன்
மூன்று வயதில்.

மணல் கோபுரம் கட்டி
ஓடிவந்ததை உதைத்திடித்தேன்
ஐந்து வயதில்.

ஓடிப்பிடித்தாடி நண்டுபிடித்து
செல்லுமிடமெல்லாம் மணலிறைத்தேன்
பத்து வயதில்.

நீரில் புரண்டு பிசுபிசுத்து
காற்றிலும் கரிப்பே ற்றினேன்
பதினைந்து வயதில்.

காதல் குடை பிடிக்க காதலன் கைபிடித்து
ஈர மனதுடன் பாதம் நனைத்தேன்
இருபது வயதில்.

இப்போது
பிள்ளை மணல் கோபுரம் கட்ட,
கடல் குடிக்கின்றன என் கண்கள்.

மாறும் மனிதரின் மாற்றங்கள் கண்டும்
மாறாமல் மௌனிக்கிறது கடல்,
கடவுளைப் போல.

Pages